Lead NewsLocal

இனமோதல்களுக்கு உரிய நடவடிக்கை இல்லையேல் நிலைமை மோசமடையும்! – இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை

“இனவாத ஆயுத மோதலின் அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சித்துவரும் இலங்கையை, தற்போதைய தாக்குதல்கள் மீண்டும் பின்னோக்கி நகர்த்தி வருகின்றது.”

– இவ்வாறு இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் கறென் ஸ்மித் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கையின் அண்மைக்கால வன்முறைகள் ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்களை அதிகரிக்க செய்துள்ளதுடன், மத சிறுபான்மையினரை ஆபத்தில் தள்ளியுள்ளது.

இந்தநிலையில், இந்த வெறுக்கத்தக்க தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் பொருத்தமான மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு, எதிர்க்கட்சி, சிவில் சமூகம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

இனவாத ஆயுத மோதலை நோக்கி இலங்கை நகர்ந்து வருகின்றது. இது நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும். எனவே, இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நிலைமை மோசமடையும் சாத்தியம் காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் இவ்விடயத்தில் இலங்கை அரசின் துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. இந்தநிலையில், இனங்களுக்கிடையே சமாதானத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசுக்கு ஐ.நா. ஆதரவு வழங்கும்.

நாட்டின் அரசமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதற்கமைய தமது மதத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தினருக்கும் உரிமை உண்டு. அதற்கமைய இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading