Local

முன்னாள் அமைச்சருக்கு நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளைக் காலை (20) 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையிலும், அதற்கு மாற்றமாகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட் தொடர்பிலான விவகாரம் ஒன்று குறித்தே, வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், கட்டாயம் ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) இந்த அழைப்பாணையை விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலின் பின்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமது தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்காக, அம்பாறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே, இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை குழப்பியடிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அடிக்கடி அழைப்பாணைகள் விடுக்கப்படுகின்றன. கடந்த 09 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 10 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட அவர், மூன்று தினங்களின் பின்னர் மீண்டும் விசாரணைக்கு வருமாறு கோரப்பட்டிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவரது வெற்றியை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர் தலைமையிலான கட்சியின் பாராளுமன்ற ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறன திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதாக, கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading