முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?
சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள பணிப்புரையை ஏற்றுக்கொள்ள முடியாதென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திருகோணமலையிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் தாதியர்கள், மருத்துவ மாதுகள் மற்றும் சிற்றூழியர்கள் இனிமேல் கலாச்சார ஆடை அணிந்து கடமைக்கு வரக்கூடாது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அலுவலர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
தாங்கள் கடமை ஏற்றது முதல் தற்போது ஓய்வூதியம் பெறும் வயதை அடைந்துள்ள இதுவரையான காலத்தில் எங்களது சீருடையுடன் கலாச்சார உடையும் சேர்த்து அணிந்தே சென்றே கடமைகளை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், தற்போது கலாச்சார உடை அணிந்து கடமைக்கு வரக்கூடாது என்றும் இதை மீறும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் இவ்விடயத்தினை கவனத்தில் எடுத்து எமக்கு நியாயம் பெற்றுத் தாருங்கள் என்று பாதிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பதவிகளுக்குரிய சீருடைக்கு மேலதிகமாக முஸ்லிம் பெண் ஊழியர்கள் தமது கலாச்சார ஆடைகளை காலாகாலமாக அணிந்து வருகிறார்கள். இதனை இப்போது அகற்ற சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
- அபு அலா

You must be logged in to post a comment.