LocalUp Country

ரூ. 50 ‘நம்பவைத்து கழுத்தறுப்பு’ – தமிழ் மக்கள் இணையம் கண்டனம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக மேலும் ஐம்பது ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுத்தருவதாக அமைச்சர்கள் தொழிலாளர்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டதாகத் தமிழ் மக்கள் இணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கான கோரிக்கை மீண்டும் வலுப்பெற்ற வேளை,

அதனை ஒடுக்கும் முயற்சியாகப் பொய் வாக்குறுதி வழங்கப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதன்போது மேலும் ஐம்பது ரூபாய் கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனையடுத்து ஆயிரம் ரூபாய்க்கான போராட்டம் தணிந்தது.

தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வுபற்றியோ கொடுப்பனவு பற்றியோ எந்த முன்மொழிவும் காணப்படவில்லை.

தேயிலைச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மாத்திரம் நிதியமைச்சர் மங்கள சமரவீர தமது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார். இது தொழிலாளர்களுக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது முற்றிலும் ஏமாற்று நடவடிக்கையாகும். தொழிற்சங்கங்கள் ஏமாற்றுவதாகக் கூறியே, அமைச்சர்கள் மனோ கணேசன், ப.திகாம்பரம் ஆகியோர் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினர்.

ஆனால், அது முற்றிலும் பசப்பு வார்த்தை என்பது நிரூபணமாகியுள்ளது. ஏமாற்றிய தொழிற்சங்கங்களுக்கும் அமைச்சர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இதுகுறித்து அமைச்சர்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதுடன், ஐம்பது ரூபாய் கொடுப்பனவு பற்றிய உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் ” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading