ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் தாக்கி மூழ்கடிப்பு:
ஹார்முஸ் நீரிணையில் ஓமானி கடல் எல்லைக்குள், ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதலால் இந்திய சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
ஓமானின் லிமா அருகே
தாக்குதலின் பின்னணியில் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மார்ச் மாதம் முற்றுகை விதிக்கப்பட்டதிலிருந்து, ஈரானின் அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்லும் வணிகக் கப்பல் போக்குவரத்தை ஈரான் இராணுவம் குறிவைத்து வந்துள்ளதால், இந்திய கப்பல் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரானாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் குறித்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளது. தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, வணிகக் கப்பல் போக்குவரத்தும், பொதுமக்களான மாலுமிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
எம்.வி. ஹாஜி அலி என்ற அந்த கப்பலானது சோமாலியாவின் பெர்பெரா துறைமுகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா துறைமுகத்திற்கு கால்நடைகளைக் கொண்டு சென்றுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், மே 13 அன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில், ஓமானின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள லிமா அருகே கப்பல் தாக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதைகளை முடக்கிய நிலையில், உருவான ஒரு புதிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை அந்தச் சரக்குக் கப்பல் பின்தொடர்ந்து சென்றதையே இந்தத் தாக்குதல் நடந்த இடம் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், ஹார்முஸ் நீரிணைத் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் Project Freedom என ஒரு நடவடிக்கையைத் துவங்கியதன் பின்னர், பாதுகாப்பான பயணத்திற்காக தற்போது தாக்குதல் நடத்தப்பட்டப் பாதையைப் பயன்படுத்துமாறு அமெரிக்க கடற்படை மாலுமிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
பிடியை வலுப்படுத்தும் ஈரான்
ஆனால், இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், பாதுகாப்பானது என அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ள இந்த வழித்தடத்தில் பயணித்த நான்கு கப்பல்கள் மே 4 மற்றும் 6 ஆகிய திகதிகளில் தாக்குதலுக்கு உள்ளாயின.
மற்றொரு கப்பல் நூலிழையில் தப்பியது. இருப்பினும், ஒரு மாதத்திற்கும் மேலாக, சிறிய இந்தியக் கப்பல்கள் உட்பட ஏராளமான கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையைக் கடக்க இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன.
ஆனால் ஈரான் இராணுவத்தின் பார்வையில் சிக்காமல், மிக ரகசியமாகவே இந்தக் கப்பல்கள் அந்தப் பாதையைக் கடந்துள்ளன. இருப்பினும், வெறும் பத்து நாட்களில் நடந்த ஐந்து தாக்குதல்கள், ஹார்முஸ் நீரிணையின் மீதான தனது பிடியை ஈரான் தற்போது மேலும் வலுப்படுத்த எண்ணியுள்ளது என்பதையே காட்டுகின்றன.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து, வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் முப்பதுக்கும் மேற்பட்ட பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக, சில கப்பல்கள் ஈரானின் பிராந்திய நீர்வழிகள் மற்றும் அதன் கடற்கரையோரமாகச் செல்லும் பாதைகளைத் தெரிவு செய்து, பாதுகாப்பான பயணத்திற்காக ஈரானுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.