World

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி

சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரான் பாராளுமன்றம் ஹோர்முஸ் நீரிணையில் பயணக் கட்டணங்களை வசூலிப்பதற்கான சட்டமூலங்களைத் தயாரித்து வரும் பின்னணியில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் போது இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு எவ்விதத் தடையுமின்றி அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நாடுகளுடனான ஈரானின் நீண்டகால இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எமது நட்பு நாடுகளின் வர்த்தக மற்றும் எண்ணெய் போக்குவரத்து கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது கடமையாகும்,” என அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இப்பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கும் ஏனைய நாடுகளின் கப்பல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்புகளின் நடமாட்டங்கள் குறித்துக் கடும் கண்காணிப்பு நிலவும் என்றும் அவர் எச்சரித்தார்.
உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அமெரிக்காவுடனான தர்க்கங்களுக்கு மத்தியில், தனது கடல் எல்லையின் மீதான அதிகாரத்தை நிலைநாட்ட ஈரான் எடுத்துள்ள இந்த நடவடிக்கை சர்வதேச அரசியலில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading