LocalWorld

பாகிஸ்தான் படையிடம் மாட்டிய இந்திய விமானி நாளை விடுவிப்பு!

பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்ட இந்திய விமானப் படை வீரர் நாளை விடுவிக்கப்படவுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தமைக்குப் பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையின்போது இந்தியப் போர் விமானங்களை இரண்டை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதன்போது ஒரு விமானப் படை வீரர் உயிரிழக்க மற்றொரு விமானப் படை வீரர் விங் கொமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் இராணுவம் கைதுசெய்திருந்தது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

அபினந்தனை விடுவிப்பதற்காக இந்தியா இராஜாங்க ரீதியாக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவூதி அரேபியா போன்ற நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இதற்கிடையே, அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading