Lead NewsLocal

பயத்தில் உறைந்து கிடக்கின்றார்கள் சிலாபம், குளியாப்பிட்டி முஸ்லிம்கள்! – ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் எடுத்துரைப்பு

சிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அகிலவிரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, இது தொடர்பில் அந்தப் பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஜனதிபதி உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, இந்தப் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அட்டகாசங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு இவ்விரு அமைச்சர்களும் கொண்டுவந்தனர்.

சிலாபம் மற்றும் குளியாப்பிட்டிப் பிரதேசங்களில் வேண்டுமென்றே வன்முறைகளைத் தூண்டி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்தப் பிரதேச முஸ்லிம் மக்கள் தற்போது பயத்தில் உறைந்து கிடக்கின்றார்கள் எனவும் ஜனாதிபதியிடம் இவ்விரு அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து ஜனாதிபதி, பதில் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் இறுக்கமாக நிலை நாட்டுமாறும் பணிப்புரை விடுத்தார்.

நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் எந்தப் பிரதேசங்களிலும் ஏதாவது சம்பவங்கள் நடந்தால் அதற்குப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் அந்தந்தப் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுமே வகை சொல்ல வேண்டும் எனவும், இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்களைப் பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading