Local

சனியன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை! சமலின் இடத்துக்கு சம்பந்தன்?

அரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார்.

அரசியலமைப்புப் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதியின் இந்த முடிவு அதிகாரபூர்வமாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் இணைந்து, சமல் ராஜபக்சவை அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக நியமிக்க பரிந்துரைத்திருந்தனர்.

எனினும், ஆட்சிக் குழப்பங்களுக்குப் பின்னர், மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகி, அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரானதும், கடந்த ஜனவரி மாதம் பேரவையின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்குகு சமல் ராஜபக்ச அறிவித்திருந்தார்.

எனினும், மூன்று மாதங்களுக்குப் பின்னரே இந்த பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணைந்து, அரசியலமைப்பு பேரவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

முன்னதாக, இரா.சம்பந்தனை மீண்டும் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவையின் அடுத்த கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading