Local

முன்னாள் போராளிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு! இராணுவம் குறித்தும் முறைப்பாடு!!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் விவகாரங்களைக் கையாளும் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்ரினா ஜேம்ஸ் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, புனர்வாழ்வுக்குப் பின்னர் தாங்கள் விடுதலை செய்யப்பட்ட போதும், இராணுவத்தின் கண்காணிப்புக்குள்ளேயே இருந்து வருவதாக முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

தமது அரசியல் செயற்பாடுகளுக்கு இராணுவத்தின் தலையீடுகளால் தடை ஏற்படுவதாகவும், அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இராணுவத் தலையீடுகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், இராணுவத்தின் கண்காணிப்புக்குள் இருப்பதால் மக்கள் தம்மைத் தொடர்ந்தும் சந்தேகிக்கின்ற நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் விவகாரங்களைக் கையாளும் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்ரினா ஜேம்ஸ், ஜனநாயக அடிப்படையிலான தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகள் தான் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு மூலமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தாம் அமெரிக்க குழுவிடம் கூறியதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ள கிறிஸ்ரினா ஜேம்ஸ், தீவிரவாத எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் ஆயுதக் குழுக்களை பிரதான அரசியல் வழிமுறைக்கு கொண்டு வரும் சிறப்பு நிபுணராவார்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதரக அரசியல் விவகாரப் பிரிவைச் சேர்ந்த ஜோன் ரூதரும் பங்கேற்றிருந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading