Lead NewsLocalNorth

யாழ். பல்கலை கற்றலை நாளை ஆரம்பிக்க மாணவர் இணக்கம்!

யாழ். பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகளை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் இணக்கம் வெளியிட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீடச் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிப்பதற்கான உயர்மட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த இணக்கம் மாணவர் ஒன்றியத்தால் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஒரு மாத காலமாகக் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்தன. எனினும், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிப் பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியது.

இந்தநிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீடச் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக மாணவர் ஒன்றியத்தினர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நிர்வாகத்துக்கு அறிவித்தனர்.

யாழ். பல்கலைக்கழகம் நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மாணவர்கள் புறக்கணிப்பை முன்னெடுத்தனர். அதனையடுத்து மாணவர் ஒன்றிய உறுப்பினர்களை அழைத்து பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சு நடத்தியது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீடச் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிப்பது தொடர்பில் உயர்மட்டத் தரப்புகளுக்கு எழுத்துமூலக் கோரிக்கைகள் உடனடியாக அனுப்பப்படும். அத்துடன், உயர்மட்டத் தரப்புக்களை நேரடியாகச் சந்தித்து மூவரது விடுதலையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

அவரது உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட மாணவர் ஒன்றியத்தினர், நாளை வெள்ளிக்கிழமை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பதாக இணக்கம் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading