Lead NewsLocalNorth

கிளிநொச்சியில் இன்று மாலை வாள்வெட்டுக் கும்பல் அடாவடி! கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் படுகாயம்!! – வீடும் மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிப்பு; மேலும் பல உடைமைகள் சேதம்

கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ளபோது வடக்கில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன.

ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 6 பெண்களும், 3 ஆண்களும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வாள்களுடன் வந்த 15 இற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வீடுகள் இரத்தத்தால் தோய்ந்து காணப்படுகின்றன.

இந்த அடாவடிக் கும்பலால் தற்காலிக வீடு ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மற்றொரு மோட்டார் சைக்கிள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு வீடுகள் உள்ளிட்ட மேலும் பல உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பங்களில் ஒரு குடும்பவம், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்திருந்தனர் எனவும், ஆனால், பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் குறித்த குடும்பத்தின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading