Lead NewsLocal

தமிழ் பேசும் கட்சிகள் கூட்டணிக்கு மனோவும் பச்சைக்கொடி!

சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்தை நண்பர் ரவுப் ஹகீம் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் மனோ எம்பி கூறியதாவது,

உண்மையில் தமிழ் கட்சிகளின், தமிழ் பேசும் கட்சிகளின் எம்பீக்கள் கட்டம் கட்டமாக ஒன்றாக அமரும் ஒரு அமைப்பு (Caucus of MPs) உருவாக்கப்பட வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்னமேயே நான் சொன்னதை இந்நாட்டு தமிழ் பேசும் மக்கள் அறிவார்கள். அது அப்போது பல காரணங்களால் நிறைவேறவில்லை.

இப்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் குளறுபடிகள் காரணமாக அந்த யோசனை கூடிவரும் காலம் கனிந்துள்ளது. இன்றைய தேசிய நெருக்கடியில் சிறுபான்மை கட்சிகள் காத்திரமாக பணியாற்றியதை தமிழ், முஸ்லிம் மக்கள் அறிவார்கள்.

சிறுபான்மை கட்சிகளின் கூட்டு முயற்சி தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டதாகும் என்பதையும், இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் நாம் உரக்க எடுத்து கூறவேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் நியாயமான அரசியல் மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தர சிங்கள கட்சி தலைவர்கள் தவறிவிட்டார்கள் என்பதை சிங்கள மக்கள் இன்று அறியாமல் இல்லை. எனவே எமது முயற்சியை சிங்கள மக்களும் புரிந்துக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து தேர்தல் கூட்டாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் அவ்வந்த கட்சிகளை பொறுத்தவை ஆகும். நான் இங்கே குறிப்பிடுவது கூட்டு செயற்பாடுகளையே ஆகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading