Local

அமைச்சர் மனோ – சீனத் தூதுவர் நாளை சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் (Cheng Xueyuan) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நாளை ( 18) வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பின்போது,  இலங்கையில் நடைமுறையிலுள்ள மொழி சட்டங்கள் குறித்தும் ,  இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன், மலையக மாணவர்களுக்கு சீன பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்குரிய புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும்,

பெருந்தோட்டப்பகுதி அபிவிருத்தியிலும் சீனா பங்களிப்பு செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை,  சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் கண்டனம் வெளியிட்டிருந்தார்.

கொழும்பு பெருநகர திடக்கழிவு முகாமைத்துவ திட்டப் பகுதியில், நாட்டப்பட்டிருந்த பெயர்ப்பலகையில், சிங்களம், மண்டரின், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. எனினும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதை உடன் திருத்துமாறு அமைச்சர் மனோ, சீனத் தூதரகத்திடம் கோரிருந்தார். தற்போது அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading