Local

இலங்கைக்கு இன்று வருகின்றார் மோடி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09) இலங்கை வருகின்றார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 30ஆம் திகதி இரண்டாவது தடவையாகவும் இந்தியப் பிரமராகப் பதவிப்பிரமாணம் செய்த நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முதலாவது அரச முறை சுற்றுப்பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தியப் பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருநாட்டு அரச தலைவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியால் இந்தியப் பிரதமருக்கு விசேட மதிய உணவு விருந்துபசாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி இரண்டாம் தடவையாகவும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனேயே தனது முதலாவது இராஜதந்திரச் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அதன்போது ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே அவர் இலங்கைக்கான இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் அரச முறை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது அரச தலைவர் இவராவார்.

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு இந்தியப் பிரதமரின் சுற்றுப்பயணம் உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading