Local

உங்கள் மொபைல் தொலைந்துவிட்டதா? இனி பொலிஸ் இணையம் செல்லவேண்டியதில்லை!

கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பிலான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக, புதிய இணையத்தளமொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இதனடிப்படையில் www.ineed.police.lk என்ற இணையத்தளத்தில் பொது மக்கள் தமது காணாமற்போன மற்றும் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் பற்றிய முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியுமென்றும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இலங்கையிலுள்ள 24 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகளில், காணாமற்போகுதல் மற்றும் திருட்டுப்போகுதல் தொடர்பில் தினமும் 800 முதல் 1000 வரையிலான முறைப்பாடுகள், பிராந்திய பொலிஸ் நிலையங்களுக்குக் கிடைக்கப்பெற்று வருகின்றன.

இவ்வேலைத் திட்டத்தை இலகுபடுத்தும் வகையிலேயே, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில், இப்புதிய தொழில்நுட்ப வசதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் வசதி கருதி, பொலிஸ் திணைக்களமும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவும் இணைந்து ஆரம்பித்துள்ள Sri Lanka Police iNeed Service எனும் இப்புதிய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு, கடந்த 11 ஆம் திகதியன்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

புதிய தொழில்நுட்பம் மூலம் பணிகளைத் துரிதப்படுத்தவும், கடதாசிப் பாவனையைக் குறைக்கும் வகையிலும், இவ்வேலைத் திட்டம் வழிவகுக்கப்பட்டிருப்பதாகவும், பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்முலம், கையடக்கத் தொலைபேசிகள் காணாமற் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ இணையத்தளத்தின் ஊடாக, மேற்படி வலைத்தளத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம்.
முறைப்பாடு கிடைத்தது முதல், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மொபிட்டல், டயலொக், எயார்டெல், எட்டிசலாட் மற்றும் ஹட்ச் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும்.

இதேபோன்று, கொள்வனவு செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள் புதியதா என்பது தொடர்பிலும், இத்தொழில்நுட்பத்துக்கூடாக கண்டறியக்கூடியதாக இருக்கும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading