பாகிஸ்தான் தேசிய தினம் இன்று – இம்ரான் கானுக்கு மோடி வாழ்த்து!
பாகிஸ்தான் தேசிய தினம் இன்று (23) கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மோடியால் அனுப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பயங்கரவாதம் வன்முறை இல்லாத சூழலில்,ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக தெற்காசிய மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி அனுப்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
” மோடியின் வாழ்த்துச்செய்தியை வரவேற்கின்றேன். இரு நாடுகளும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரிவான ஆலோசனை நடத்துவதற்கான நேரம் வந்துள்ளது.” என இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் – புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான்மீது கடும் சொற்கணைகளைத் தொடுத்தது இந்தியா.
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைத்து குண்டுமழை பொழிந்தது இந்திய விமானப்படை. இதனால் பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது. பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர், விடுதலை செய்யப்பட்ட பின்னர் பதற்றம் தணிந்தது.
இந்நிலையிலேயே பிரதமர் மோடி, இம்ரான் கானுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.
நேற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததால், கோபம் அடைந்த இந்தியா அந்த நிகழ்ச்சியை புறக்கணித்திருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
