Lead NewsLocal

சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி தெரிவுக்குழுவை அடக்கமுடியாது! – மைத்திரிக்கு ரணில் சாட்டையடி

“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியாது; இதைக் கலைக்கவும் முடியாது.”

– இவ்வாறு நேற்று சிங்கப்பூர் செல்வதற்கு முன்னர் அதிரடிக் கருத்தைத் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இரண்டு நாட்கள் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு பிரதமர் ரணில் நேற்று சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூர் செல்வதற்கு முன்னர் நேற்றுப் பகல் அலரி மாளிகையில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பிலும், தெரிவுக்குழுவைச் சாடி மஹிந்த அணியினர் வெளியிட்டுவரும் தகவல்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியுள்ளதாவது:-

“நாடாளுமன்றத்தின் ஏகோபித்த தீர்மானத்துக்கமையவே தெரிவுக்குழுவை சபாநாயகர் நியமித்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம். இதில் நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எவரும் தலையிட முடியாது.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 260 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியையும் அதனுடன் தொடர்பட்டவர்களையும் நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். எவர் குற்றமிழைத்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

எனவே, தெரிவுக்குழு அழைக்கின்ற அனைவரும் பதவி வேறுபாடின்றி அதன் முன்னிலையில் சாட்சியமளித்தே ஆகவேண்டும். இது தொடர்பில் ஊடகங்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.

சாட்சியமளிக்க வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி எவரும் கட்டுப்பாடுகளைப் போட முடியாது. அதேபோல், இந்தத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியாது. இதைக் கலைக்கவும் முடியாது.

பொது எதிரணியினர் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகவும் தெரிவுக்குழுவை கண்டபடி விமர்சிக்கின்றனர். இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளக்கூடாது.

தெரிவுக்குழு விசாரணையின் நிறைவில் பல உண்மைகள் வெளிவரும். அப்போதுதான் தெரிவுக்குழுவின் நம்பகத்தன்மையை அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்.

தெரிவுக்குழுவைக் கலைக்கவில்லை என்பதற்காக அமைச்சரவையும் இயங்காது என எவரும் நினைக்கக்கூடாது. அமைச்சரவை தொடர்ந்து இயங்குகின்றது. ஏதோவொரு வழியில் விரைவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading