Lead NewsLocal

கூட்டாகப் பதவி துறந்தமை ஏன்? மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்குவோம்! – சபையில் ஹக்கீம் அறிவிப்பு

“முஸ்லிம் அமைச்சுப் பதவிகளைக் கூட்டாக இராஜிநாமா செய்தமை குறித்து பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு விரைவில் நேரில் விளக்கமளிக்கப்படும்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும் என பௌத்த பீடங்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த திங்கட்கிழமை இராஜிநாமாக் கடிதத்தை, ஓர் அறிக்கையூடாக கூட்டாகவே கையளித்தோம். எனினும், அரசமைப்பின் பிரகாரம் தனித்தனியாகவே இராஜிநாமாக் கடிதங்கள் கையளிக்கப்படவேண்டும் எனப் பிரதமர் கூறினார்.

இதற்கிடையில் நோன்புப் பெருநாள் காரணமாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொந்த ஊரை நோக்கிப் புறப்பட்டுவிட்டனர். இதன்காரணமாகவே இராஜிநாமாக் கடிதங்களை தனித்தனியாகக் கையளிப்பதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டது.

எது எப்படியிருந்த போதிலும் கடந்த திங்கட்கிழமை முதல் நாம் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகிவிட்டோம் என்பதை அறியத்தருகின்றேன்.

அதேவேளை, நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் நேற்றிரவு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர். மகாநாயக்க தேரர்களின் கருத்துகளை நாம் மதிக்கின்றோம். அறிவிப்பொன்றை விடுத்தமைக்காக அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது குழுவொன்று விரைவில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து, உண்மையான நிலைவரம் என்னவென்பது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading