பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில், பஸ் சேவைகள்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் பதுளை நகரங்களுக்கு இடையில், ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரை இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என, ரயில்வேத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த விசேட ரயில் சேவை, நேற்று முதல் காலை 7.30 மணிக்கு, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் புறப்படும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தவிர, நேற்று முதல் பதுளையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி ரயிலொன்று பயணிக்கவுள்ளதாக, ரயில்வேத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் விசேட பஸ் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கைப் போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இது தவிர, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நீர்கொழும்பு, ஜா – எல, வென்னப்புவ போன்ற பகுதிகளுக்கும், குறுந்தூர பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
