Sports

89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா! – தோற்றது பாகிஸ்தான்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

இவ்விரு வீரர்களும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஓட்டங்கள் சீராக உயர்ந்தன. மேலும் இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

இந்த ஜோடியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த லோகேஷ் ராகுல் 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.

தொடர்ந்து கம்பீரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட ரோகித் சர்மா, நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 3 சிக்ஸர் 14 பவுண்டரிகளுடன் 113 பந்துகளில் 140 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கி சிறிது அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 26 ஓட்டங்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி ஒரு ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பாக ஆடி தனது அரைச் சதத்தைப் பதிவு செய்த விராட் கோலி 77 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது

இறுதியில் விஜய் சங்கர் 15 ஓட்டங்களும், கேதர் ஜாதவ் 9 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 336 ஓட்டங்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது அமிர் 3 விக்கெட்டுக்களும், வஹாப் ரியாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 337 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 337 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சார்பில் இமாம்-உல்-ஹக் மற்றும் பக்தர் சமான் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். அதில் இமாம்-உல்-ஹக் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, பக்தர் சமானுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஓட்டங்கள் வேகமாக உயர்ந்தன. இந்த ஜோடியில் பாபர் அசாம் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய பக்தர் சமான் தனது அரைச் சதத்தைப் பதிவு செய்திருந்த நிலையில் 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது ஹபீஸ் 9 ஓட்டங்களும், ஷாகிப் மாலிக் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் வெளியேறினர்.

அடுத்ததாக அணித்தலைவர் சர்பரஸ் அகமது 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக இமாத் வாசிமுடன், சதாப் கான் ஜோடி சேர்ந்தார்.

இந்நிலையில் 35ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டது. பின்னர் டி.எல்.எஸ் முறைப்படி பாகிஸ்தான் அணிக்கு 40 ஓவர்களில் 302 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி 30 பந்துகளில் 136 எடுக்க வேண்டிய சூழ்நிலை பாகிஸ்தான் அணிக்கு உருவானது.

இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாத் வாசிம் 46 ஓட்டங்களும், சதாப் கான் 20 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

முடிவில் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading