Lead NewsLocal

தமிழர் தரப்பு கோரிக்கை ‘அவுட்’ – இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம்! வெளியானது ஜெனிவா தீர்மான வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து எதிர்வரும் 20 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன.

இதற்கான தீர்மான முன்வரைவு,  ‘இலங்கையில்  நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில், ஜெனிவாவில் உள்ள பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் நேற்று உலாவ விடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த வரைவில், 2021 மார்ச் மாதம், விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், பேரவையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் அந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை  எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த வரைவில், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கைக்கு இனியும் காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் உட்பட பல தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading