Local

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஐ.தே.க. பச்சைக்கொடி! பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடவும் முடிவு!!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி இன்று ( 22) அறிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி.  இன்று பேச்சு நடத்தியது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற   சந்திப்பில்  அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், நளிந்த ஜயதிஸ்ஸ ஆகிய எம்.பிக்கள் ஜே.வி.பியின் சார்பில் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித்த ஹேரத் எம்.பி.,

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கை ரீதியிலான தீர்மானமாகவுள்ளது. எனினும்,  இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக்கட்சிகளுடனும் பேச்சு நடத்த வேண்டியுள்ளது.

அத்துடன், 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் தேர்தல் முறைமை, 13 ஆவது திருத்தச்சட்டமூலத்துடன் தொடர்புபட்ட விடயங்களும் இருக்கின்றன. இவை குறித்து ஆராய்ந்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தரப்பில் எமக்கு அறிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும். மூன்று வாரகாலப்பகுதிக்குள் இது விடயத்தில் இறுதி கட்டத்தை எட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஜே.வி.பி. தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து, ’20’ ஐ ஆதரிக்குமாறு ஜே.வி.பியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதன் மற்றுமொரு அங்கமாகவே பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இன்று சந்திப்பு நடைபெற்றது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading