கைவிரித்தது ஐ.தே.க.- கடுப்பில் முற்போக்கு கூட்டணி! ஆளுங்கட்சி கூட்டத்திலும் ஏமாற்றம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கை குறித்து இன்று (05) நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி அக்கறைகாட்டவில்லை என தெரியவருகின்றது.
ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இரவு அலரிமாளிகையில் நடைபெற்றது.
இதன்போது 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகள் சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளன.
அவ்வேளையில், ” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதீட்டின் ஊடாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவு குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டில் எதுவும் இல்லை.
பெருந்தோட்டத்தொழிலாளர்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் அநீதியாகும்.” என வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார் என அறியமுடிகின்றது.
இதற்கு பதிலளித்துள்ள நிதி அமைச்சர், இது தனியார் கம்பனிகளுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, பொறுமையாகத்தான் தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சரின் கூற்றுக்கு பதிலளிப்பதற்கு வேலுகுமார் எம்.பிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும், பிரதமர்கூட பொறுப்பற்ற விதத்திலேயே பதில் வழங்கியுள்ளார் என்றும் அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் குறித்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு பட்ஜட் ஊடூக 140 ரூபா கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.
பிரதமர் மற்றும் பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பையடுத்து பட்ஜட் ஊடாக 50 ரூபா கொடுப்பனவே வழங்கப்படும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜட்டில் அந்த முன்மொழிவுகூட உள்ளடக்கப்படவில்லை.
