Lead NewsLocalUp Country

ஐ.தே.கவுக்குள் கட்சித் தாவல் சூழ்ச்சியாம்! – வெற்றி வேட்பாளரையே களமிறக்குவோம் என மஹிந்த சூளுரைப்பு

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்சித் தாவல் தொடர்பில் ஒரு சூழ்ச்சி இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. அது அவர்களுக்குள் ஏற்பட்ட சூழ்ச்சி. எனினும், அது வெளியாகிய நிலையில் அந்த விடயம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. நாங்கள் எதனையும் செய்யவில்லை. அது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை. எத்தனை வேட்பாளர்கள் வந்தாலும், மக்கள் புத்திசாலித்தனமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்கள்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளரையே களமிறக்குவோம்” எனவும் அவர் சூளுரைத்தார்.

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வருடாந்த இரத பவனி நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

வழிபாடு முடிவடைந்ததும் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாங்கள் மக்களை நம்புகின்றோம். புதுவருடத்தில் மக்களுக்குக் குளிப்பதற்குத் தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. இந்த மக்களுக்கு ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியவில்லை. எங்கள் காலத்தில் கேட்ட சம்பளத்தைக் கொடுத்தோம். அரசு என்ற வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்குமாறு கம்பனிகளிடம் வலியுறுத்த வேண்டும்.

அரசால் அதனைச் செய்ய முடியாவிடின், அரசால் இயலுமான விடயம் என்ன? இந்தத் தோட்டப்புறங்களில் உள்ள வீதிகளை அமைத்தது யார்? இந்தப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை அமைத்தது யார்? நுவரெலியா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தது யார்? இது தொடர்பில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பத்தில் தெரியாமல் இருந்தது. எனினும், இப்போது தெரிந்துகொண்டுள்ளனர். நுவரெலியா வைத்தியசாலையை இன்னமும் திறந்து வைக்க முடியாமல் உள்ளது. நான் அமைத்துக்கொடுத்ததை திறக்க அவர்களால் முடியவில்லை. அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் அதே நிலைமையே காணப்படுகின்றது.

எதிர்வரும் காலத்தில் மாகாண சபைத் தேர்தலே நடைபெற வேண்டும். எனினும், ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும் என எதிர்ப்பார்கப்படுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் அதன் பின்னரே நடைபெற வேண்டும். எனினும், ஏதாவது ஒரு தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு விளங்கியதுதானே!” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading