LocalNorth

கொக்குவில் மேற்கு பகுதியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்! – வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு; பொருட்களும் அடித்து உடைப்பு

யாழ்ப்பாணம், கொக்குவில் மேற்கு, மஞ்சவனப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்த அட்டூழியத்தைச் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி உட்படப் பெறுமதியான பொருட்கள், தளபாடங்கள் சேதமாகியுள்ளன. வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாகத் தாக்குதலில் இருந்து தப்பிக் கொண்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மானிப்பாய் வீதி வழியாக வாள்களுடன் தப்பிச் சென்றதைப் பொதுமக்கள் அவதானித்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

அதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வாள்வெட்டுத் தாக்குதல்களில் ஈடுபடுவோருடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி எந்த இடத்திலும் பேச்சு நடத்தத் தயார் என்று கூறியிருந்தார். அவரது கூற்றுத் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்று கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அங்கிருந்து தப்பித்தும் சென்றுள்ளனர்.

பகல் வேளைகளில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் பயணித்துத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு கும்பல்கள் தப்பிச் செல்கின்றமை தொடர்பாகப் பொதுமக்கள் கடும் விசனத்தையும், சந்தேகங்களையும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading