மாயமான சிறுவன் தேயிலை மலைக்குள் இருந்து மீட்பு!
அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று மாலை (19) காணாமல்போன 2 வயதுடைய சிறுவன் இன்று (20) காலை தேயிலை மலைப் பகுதியிலிருந்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, வெளியே சென்ற சிறுவன் திடீரென காணாமல் போயிருந்தார்.
குறித்த சிறுவனை தேடும் பணியில் பொலிஸாரும், பிரதேசவாசிகளும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் இரவோடிரமாக ஈடுபட்டனர்.
இன்று காலையும் தேடுதல் தொடர்ந்தது. சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் தேயிலை மலை பாதையில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
நபர் ஒருவர், சிறுவனை விட்டுச் செல்வதை கண்ட பிரதேசவாசிகள் குறித்த நபரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது, நபர் தப்பிச் சென்றுள்ளார்.
எனினும் மேற்படி சந்தேகிக்கும் நபரை தேடும் பணியில் பிரதேசவாசிகளும், பொலிஸாரும் ஈடுப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவனை அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
க.கிசாந்தன்
