EastLead News

அம்பாறை பள்ளிவாசல் நிர்வாகத்தை வெளிப்பூச்சால் அசைக்கவே முடியாது! – டாக்டர் றஷீத் திட்டவட்டம்

“அம்பாறை ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் திடீரென மாற்றம் செய்யப்பட்டமை ‘பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுட்ட கதை போன்றதே.’ அது வெறும் வெளிப்பூச்சான விடயம். இதன் உண்மை நிலையை உறுதிப்படுத்தி பழைய நிர்வாகமே பள்ளிவாசலை கண்காணிக்க முழு உரித்தும் உடையவர்கள் என நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது.”

– இவ்வாறு இப்பள்ளிவாசலின் பொருளாளர் டாக்டர் ஏ.எம்.எம்.ஏ.றஷீத் இடித்துரைத்துள்ளார்.

குறித்த பள்ளிவாசலின் நிர்வாக சபை குறித்த வழக்கு விசாரணைத் தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“அம்பாறை பள்ளிவாசல் எரிப்பு சம்பவத்தின் பின்னர் பல விதமான உள்ளக பிளவுகளும், பிணக்குகளும் நிர்வாகங்களுக்குள்ளேயே தலைதூக்கி வந்தன. இவ்வாறிருந்த நிலைமையில் கடந்த 2018.ஜூலை. 06ஆம் திகதி இடம்பெறவிருந்த நிர்வாகக் கூட்டத்தை, நிர்வாக சபை உறுப்பினர்கள் சிலரின் நிலைமை கருதி பிற்போடப்பட்டிருந்தோம்.

அதேவேளை இந்தக் கூட்டத்தின் திகதி பிற்போடப்பட்ட சம்பவத்தைத் தொடர்புபட்ட அரச உத்தியோகத்தருக்கும் அலுவலக ரீதியாக அறிவித்திருந்தோம். அப்படி இருக்கும்போது அம்பாறை பள்ளிவாசலை அண்மித்து இருக்கின்ற சிலர் குழுவாக இணைந்து வக்பு சபையின் அனுமதியுடன் புதிய நிர்வாகம் ஒன்றை குறித்த அதே திகதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு கூட்டத்தை நடத்தியிருந்தனர். இதற்காக இரண்டு கலாசார உத்தியோகத்தர்களும் குறித்த கூட்டத்திற்கு சமுகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், அங்கு உத்தியோகபூர்வமற்ற நிர்வாகமும் அத்துமீறிய கூட்டமும் இடமபெற்றமையைக் கண்டித்து உடனடி நடவடிக்கைக்காக நீதிமன்றில் முறையீடு செய்தமைக்கான வழக்கே இன்று இடம்பெற்றது.

இந்த வழக்கில் இந்த விடயமாக இரண்டு சட்டத்தரணிகள் ஆஜராகி குறித்த விடயம் தொடர்பாக முழுமையான வாதங்கள் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு, இறுதியாக இன்றைய வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட தீர்ப்பின்படி இதுவரை காலமும் தலைவராக செயற்பட்டுக் கொண்டிருந்த ஏ.எல். ஹாரூன், செயலாளர் ஏ.எல்.எம். பைதுல், டாக்டர் ஏ.எம்.எம்.ஏ.றஷீத் உள்ளிட்ட குழுவினருக்கே பள்ளிவாசல் நிர்வாகத்தின் முழு அதிகாரமும் உள்ளது.

மேலும், வக்பு சபையின் அனுமதியின் பிரகாரம் உருவெடுத்த புதிய நிர்வாகத்தினருக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லை எனவும், அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்காக ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையின் பிரகாரம் புதிய நிர்வாகத்தை வேறு எந்த வழியிலும் இடைநடுவில் கலைக்க முடியாது என்பதையும், இந்த நிர்வாகமே தொடராக செயற்பட உரித்துடையவர்கள் என்பதையும் இந்த அறிக்கையின் மூலம் டாக்டர் ஏ.எம்.எம்.ஏ.றஷீத் ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading