Local

இழுத்தடிப்புகளைக் கைவிட்டு உடன் தீர்வு தரவேண்டும் அரசு! – சபையில் சாந்தி எம்.பி. கோரிக்கை

காணி விடுவிப்பில் இழுத்தடிப்பு, பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிப்பு உட்பட தமிழ் மக்கள் நெடுநாட்களாகவே எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், தம்மை விடுவிக்குமாறுகோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற துறைமுகம் மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச்சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவிப்புகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தெற்கில் மஹிந்த அணி நடத்துவதுபோல் அரசுக்கும், நாட்டுக்கும் இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகள் அல்ல அவை.

தாம் பூர்வீகமாக வாழ்ந்த மண்ணை மீட்டெடுப்பதற்காகவும், ஆக்கிரமிப்புகளிலிருந்து தமது அடையாளங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே எமது மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான எந்தவொரு அறிவிப்புகளையும் அவர்கள் விடுக்கவில்லை. மாறாக புனர்வாழ்வளித்தேனும் தம்மை விடுதலை செய்யுமாறே கேட்கின்றனர்.

சிறையில் வாடுபவர்களின் உறவினர்களும் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். வருமானம் இன்றி வாழ்வாதாரத்துக்கு ஏங்குகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருதி, நல்லிணக்கத்தை கோஷமாக மட்டும் எழுப்பாது, உடனடியாகத் தீர்வுகளை வழங்க முன்வரவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading