Local

அச்சத்தால் நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைக்க மைத்திரி திட்டம்? – மீறப்படுமா 19 ஆவது திருத்தச் சட்டம்?

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அலரிமாளிகையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து முகநூலில் நேரலையில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவும் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதிய பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைப்பதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

சட்டவிரோதமாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி, இப்போது இன்னொரு சட்டவிரோத நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றார்.

19ஆவது திருத்தச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் கலைக்க முடியாது.

ஆனால், அரசியல் சட்டத்தை மீறி அதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி இறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஒன்றரை வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. எனினும், 19 ஆவது திருத்தச் சட்டத்தில் அது மாற்றியமைக்கப்பட்டது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பாகவும், ஜனாதிபதி, சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கோரியுள்ளார் என்றும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading