Features

பார்போற்ற சரித்திரம் படைத்த பார்த்தீபனின் நினைவேந்தல்..!

இந்திய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக 12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று (15.9.2018) உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் பாரதப் படைகளுக்கு எதிரான பட்டினிப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு நடத்தினார். செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம், 12 நாட்களின் பின்னர் செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி திலீபனின் வீரச்சாவுடன் முடிவுக்கு வந்தது.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அஹிம்சை வழிப் போராட்ட வழிகள் தோல்வியடைந்த காரணத்தால் ஆயுத வழிப்போராட்டம் ஆரம்பமானது. இந்த ஆயுதப் போராட்ட வழியில் முக்கிய இடம் வகித்தவர்களில் ஒருவரான திலீபன் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்ல, அஹிம்சை வழிப் போராட்டத்தையும் நடத்த முடியும் என உலகுக்கு எடுத்துக் காட்டியவர்.

யாழ்ப்பாணத்தில் ஊரெழு எனும் கிராமத்தில் ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நான்காவது கடைக்குட்டி மகனாக 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி பார்த்தீபன் பிறந்தார்.

யாழ். பல்கலைக்கழத்தில் மருத்துவபீட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் விடுதலைத் தாகம்கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தலைவராக ஏற்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் திலீபன் என்ற பெயரில் அவர் சேர்ந்தார்.

ஆயுதப் போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த நிலையில் சமாதானப் படை என்ற போர்வையில் இந்திய இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் நுழைந்தது. பின்னர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து, தமிழர் தாயகப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அத்துமீறல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

இதனைக் கண்டித்து திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

1) பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3) இடைக்கால அரசு நிறுவப்படும்வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல செயற்பாடுகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

ஆகிய கோரிக்கைகளேயே திலீபன் முன்வைத்தார்.

“கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தண்ணீரும் அருந்தப்போவதில்லை” என்று அறிவித்த அவர், அந்தக் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாததால் பன்னிரண்டாம் நாள் (26.09.2017) காலை 10.58 மணிக்கு வீரமரணமடைந்தார்.

தமிழின விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. எனினும், 2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வரப்பட்டதாக அரசு அறிவித்த காலத்திலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டுவரை திலீபனின் நினைவுநாள் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவுகூரப்படவில்லை.

இறுதிப் போருக்குப் பின்னர் கடந்த வருடத்திலிருந்து (2016) தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் திலீபனின் நினைவேந்தல் வார நிகழ்வுகள் பகிரங்கமாக நடைபெறுகின்றன.

திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட நல்லூர் வீதியிலும், திலீபனின் நினைவுத்தூபி அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியிலும் இன்று காலை திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!” என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த ஈழத்தமிழ் மறவன் திலீபனின் நினைவேந்தல் வாரத்தில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading