அண்டார்டிகாவில் மைக்ரோபிளாஸ்டிக் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுப்பு!

நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக அண்டார்டிக்காவில் புதிதாகப் படர்ந்த பனியில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் தடயங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த நிகழ்வினால், தடையற்ற பிளாஸ்டிக் நுகர்வானது இப்போது பூமியில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் ஊடுருவியுள்ளது என்பது நிரூபணமாகி இருக்கிறது.
அண்டார்டிக் பனியில் அதிகரித்துள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸின் காரணத்தினால், பனி உருகுவது அதிகரிக்கும். அது, இறுதியில் அண்டார்டிக்காவின் விசித்திரமான சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாய் முடியும், என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர்.
மைக்ரோ பிளாஸ்டிக் என்பது நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக், மீச்சிறு துகள்களாக உடைந்து காணப்படுவது தான். பிளாஸ்டிக் அழிய அதிக காலம் ஆகும் என்பது நாம் அறிந்ததே. மிக நுண்ணிய துகள்களாக இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இயற்கையில் கலந்து மோசாமான பாதிப்புகளை பூமிக்கும் மனிதர்களுக்கும் ஏறபடுத்துகின்றன. இது ஒரு நானோ மீட்டர் அளவுதான் இருக்கும். சில நேரங்களில் மில்லி மீட்டரில் காணப்படலாம். வளி மண்டலத்தில், கடல் நீரில் ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருக்கும்.
அண்டார்டிக் பனியில் காணப்படும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ், அளவில் மிகவும் சிறியதாக காணப்படுகின்றன. ஒரு அரிசி தானியத்தை விடவும் சிறியதாக இருக்கிறது. முன்னதாக, அண்டார்டிக் கடல் பனி மற்றும் மேற்பரப்பு நீரில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் புதிய பனியில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் PhD மாணவர் அலெக்ஸ் ஏவ்ஸ் என்பவர், டாக்டர் லாரா ரெவெல் மேற்பார்வையின் கீழ் இந்த ஆய்வை நடத்தினார். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது The Cryosphere என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக அலெக்ஸ் ஏவ்ஸ் கடந்த 2019-ல் Ross Ice Shelf -லிருந்து பனி மாதிரிகளைச் சேகரித்தார். ஆய்வில், வளிமண்டலத்திலிருந்து மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பனியில் ஊடுருவியிருப்பதை அவர் கண்டறிந்தார். அந்த பனி அலமாரியில் உள்ள 19 மாதிரிகளையும் ஆய்வுக்குட்படுத்தியதில், அவை அனைத்திலுமே பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
சராசரியாக, ஒரு லிட்டர் பனியில் 29 மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை ஏவ்ஸ் கண்டறிந்தார். தி கார்டியன் இதழின் படி, இது ராஸ் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள செறிவுகளைக் காட்டிலும் அதிகமாகும்.
மொத்தம் 13 வகையான பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பொதுவானவையாக இருந்தன. இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் விமானத்தில் பயணித்திருக்கலாம் அல்லது மனித சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வரப்பட்டிருக்கலாம். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து நமது நுரையீரல் வரை மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இப்போது கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இவற்றால் மனித செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றன என்பதை விரைவாக உணர்ந்து கொள்ள வேண்டும்
