Local

அனோஜனுக்கு மன்னிப்பா! மரண தண்டனையா? அக்டோபர் 17 இல் முடிவு…

🛑 அனோஜன் வழக்கு: அடுத்து என்ன நடக்கும்?
__________________________________

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இகழ்ந்து முகநூலில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கைதான அனோஜன் விவகாரத்தில் தற்போது என்னென்ன முன்னேற்றம் நடந்திருக்கிறது? மேலும் என்னென்ன விடயங்கள் நடக்கவிருக்கிறது? என பலரும் வினவுகின்றனர்.

இன்று காலை வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில்…

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சவூதி அரேபியா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாகப் பதிவாகியுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள், மேலும் அனோஜன் விவகாரத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் என அனைத்து விவாதங்களையும் இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் தொடர்ந்து அவதானித்து வருவதுடன், அவை தொடர்பான தகவல்கள் சவூதி அரேபிய தலைநகருக்கும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் வாழும் நாடு கடந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் புலம்பெயர் தமிழர்களும், அந்தந்த நாடுகளில் உள்ள சவூதி அரேபியா தூதரகங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி தலைமையிலான முஸ்லிம் பிரதிநிதிகள் குழு சவூதி அரேபியாவுக்குச் செல்லவுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் அனோஜனின் வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

🔴 அடுத்து என்ன நடக்கும்❓ “சட்டம் தனது கடமையைச் செய்யும்.”

குறித்த வழக்கு ரியாத் நகரிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தமாம் மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்பு ஆராயப்படும்.

அதன் பின்னர், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மீண்டும் உறுதிப்படுத்தி (மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்படும்) என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

அதனையடுத்து, மரண தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான அனுமதிக்காக சவூதி அரேபியா மன்னரின் அதிகாரபூர்வ உத்தரவு பெறப்படும். அதன் பின்னர், இறுதி முடிவை மன்னர் “சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சௌத்” அவர்கள் அறிவிப்பார். அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒருவரால் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

ஆனால், மரண தண்டனைத் தீர்ப்பை ஏற்று தண்டனையை நிறைவேற்றுவதா அல்லது பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதா என்பதற்கான முழு அதிகாரமும் மன்னர் “சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சௌத்” அவர்கள் எடுக்கும் முடிவிலேயே தங்கியிருக்கும்.

பெரும்பாலும், மரண தண்டனை நிறைவேற்றப்படும் சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணமாக, தண்டனை பெற்ற குற்றவாளியாகக் கருதப்படும் அனோஜன் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு வழங்க மன்னர் முன்வரமாட்டார் எனவும் அங்குள்ள சட்ட வல்லுனர்கள் தெரிவிப்பதாகவும் அங்கிருந்து வெளியாகியுள்ள செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதனிடையே, அனோஜன் வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள், சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணை மற்றும் அதன் பின்னரான தீர்மானங்கள் குறித்து தற்போது இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

_ அஹ்மட் புர்க்கான் _
கல்முனை

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading