அமெரிக்காவில் ஒரே நாளில் 99 ஆயிரம் பேருக்கு கொரோனா!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 99 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஜனாதிபதி பதவிக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் கொரோனா பரவல் அலட்சியப்படுத்தப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2 நாட்களுக்கு முன்னதாக முடிவடைந்த நிலையில், உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் துவங்கி விட்டது. இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் பிரசாரங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகிய நடவடிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன என்றும் அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
அவர்களது குற்றச்சாட்டு உண்மை என்பதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 99 ஆயிரத்து 660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை கலிபோர்னியாவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் உயிரிழப்பு சதவீதம் ஏற்கனவே அமெரிக்காவில் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில்தான் அங்கு தேர்தல் நடந்தது. அதற்கான பிரசாரங்களும் அனல்பறக்க நடந்தன. இந்த பரபரப்பில் கொரோனா விழிப்புணர்வு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அதன் விளைவு ஒரே நாளில் கிட்டத்தட்ட புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா துவங்கிய நாளில் இருந்து இந்த எண்ணிக்கை புதிய சாதனை என்றும் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், கொரோனா விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒருபோதும் தொய்வு ஏற்படக் கூடாது என்று, தற்போது மருத்துவ நிபுணர்கள் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்….
