EastLead NewsLocal

அரசியல் கைதிகளுக்காக கொதித்தெழுந்தது கிழக்கு! – ஆர்ப்பாட்டப் பேரணியில் திரண்டனர் மக்கள்

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முதலில் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து பஸ் நிலையம் வரையில் கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காந்தி பூங்கா முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய நல்லாட்சி அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் விண்ணதிரக் கோஷங்களையும் எழுப்பினர்.

“அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய முன்வரவேண்டும்” என்று இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

நல்லாட்சி அரசை தமிழ் மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புடன் கொண்டு வந்தனர் எனவும், அவர்களின் எதிர்பார்ப்புகள் எதனையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை எனவும் இதன்போது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading