அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.உடல் நல்லடக்கம்!

நேற்று மறைந்த பிரபலப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப் பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக அரசு அறிவித்தபடி – அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் முடிந்திருக்கிறது. எஸ்.பி.பி. என்ற மகத்தான பாடகரின் இசைமயமான வாழ்வுக்குக் கிடைத்த உரிய மதிப்பு இது.
கேரளாவில் நடிகை ஸ்ரீவித்யா மறைந்தபோது, கேரள அரசின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புதுச்சேரியில் மறைந்தபோது, புதுவை அரசின் மரியாதையுடன் நல்லடக்கம் நடந்தது.
தமிழகத்தில் கலைஞர்களுக்கு அரசு மரியாதை கொடுப்பதில் இதுவரை தயக்கம் நீடித்திருக்கிறது. திரையில் கோலோச்சிய பல கலைஞர்களுக்கு, ஜெயகாந்தனைப் போன்ற ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசின் மரியாதை கிடைக்கவில்லை.
அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் எஸ்.பி.பி.க்கு அரசு உரிய மரியாதை காட்டியிருப்பது நல்லதொரு முன்னுதாரணம்.
