Jobs

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SLIIT) கல்வியின் மகத்துவத்தை மேம்படுத்தியுள்ளது

 

வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுக்கும் ஆற்றல் மிக்க பட்டதாரிகளை உருவாக்குவதில் SLIIT ன் தொடர்ச்சியான வெற்றியை 2026 மார்ச் பட்டமளிப்பு நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளது  

 

உயர் கல்வியை வழங்குவதில் நாட்டில் அரச சார்பற்ற முன்னிலை கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Sri Lanka Institute of Information Technology – SLIIT), 2026 மார்ச் பட்டமளிப்பு வைபவத்தை வெகுசிறப்பாக நிறைவு செய்துள்ளது. பாண்டித்தியம், தலைமைத்துவம், மற்றும் சமூக ஈடுபாட்டில் அதியுயர் தராதரங்களைக் காண்பித்து சாதனை படைத்துள்ள 800 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு இவ்வைபவத்தில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

இப்பட்டமளிப்பு வைபவம் மாலபேயிலுள்ள SLIIT பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான கேட்போர்கூடத்தில் இரு தினங்களாக இடம்பெற்றது. மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் இடம்பெற்ற நிகழ்வில், மேடையில் ஏறி தமது பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு பட்டதாரியினதும் கடின உழைப்பு, திறமை, மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைப் போற்றிப் பாராட்டுவதற்காக மாணவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், பீடத்தினர், மற்றும் பழைய மாணவர்கள் என பெரும் திரளானோர் ஒன்றுகூடியிருந்தனர்.

 

மிகவும் போட்டிமிக்க தொழிற்சந்தையில் மீள்திறன், அணுகல், மற்றும் பொருத்தம் ஆகியவற்றுடன் தகைமைகளையும், விசேட நிபுணத்துவங்களையும் கொண்ட புதிய மாணவர் அணியொன்று SLIIT கல்வி நிறுவனத்தில் தமது கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளது. தமது வாழ்விலும், தொழில்களிலும், மற்றும் தம்முடைய சமூகங்கள் மத்தியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை படைத்த முன்னோக்கு சிந்தனை கொண்டவர்களாக தாம் உள்ளோம் என்ற தெளிவுடன் இப்பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என துணைவேந்தர் அவர்கள் தனது உரையின் போது கேட்டுக்கொண்டார்.

 

University of Victoria Canada (UVic) ன் துணைத் தலைவரும், முதல்வருமான பேராசிரியர் எலிஸபெத் குரொஃப்ட் அவர்கள் முதல் நாள் நிகழ்வுகளின் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். UVic ன் சர்வதேச ஈடுபாடுகளுக்கான உதவித் துணைத் தலைவரான கலாநிதி ஏ.ஆர். இளங்கோவன் அவர்களும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தார். Liverpool John Moores University ன் உதவிப் பீட இணை-துணைவேந்தரான கலாநிதி கிறிஸ்டியன் மத்தியூஸ் அவர்கள் நிகழ்நிலையாக பிரதம அதிதியின் உரையை ஆற்றினார்.

 

இலங்கை வங்கி, டயலொக் ஆஸியாட்டா, Genetech, IFS R&D International, Scybers, Six Sigma Management Institute, Suchith Mohotti Associates, மற்றும் Walkers CML ஆகிய தொழிற்துறைக் கூட்டாளர்களும் இந்த மேன்மைவாய்ந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

 

25 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த போற்றத்தக்க பயணத்தில் மற்றுமொரு சாதனை மைற்கல்லாக 2026ம் ஆண்டு பட்டமளிப்பு வைபவம் மாறியுள்ளது. நற்பலன் தரவல்ல மாணவர் அனுபவத்திற்காக SLIIT ஐ நாடுகின்ற இளைஞர்,யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் 1999ம் ஆண்டு முதல் ஆழமான மற்றும் புத்தாக்கமான பயிற்சிகளை SLIIT அவர்களுக்கு வழங்கி வந்துள்ளது.

 

கல்வி மகத்துவத்தின் தனித்துவமான அடையாளமாக SLIIT மாறியுள்ளதுடன், 2026ம் ஆண்டுக்கான Times உயர் கல்வி சர்வதேச பல்கலைக்கழக தரப்படுத்தல்களில் இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக 3வது ஸ்தானத்தில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading