கடலுக்கடியில் நிழல் யுத்தம்…!!!
உலகின் மிக முக்கியமான பொருளாதார மற்றும் டிஜிட்டல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்களை (Undersea Internet Cables) ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
எண்ணெய் வர்த்தகத்திற்குப் பெயர் பெற்ற இந்த ஜலசந்தி, இன்று நவீன உலகின் டிஜிட்டல் நரம்பு மண்டலமாகவும் மாறியுள்ளது. ஆனால், இந்த ‘கண்ணுக்குத் தெரியாத’ உள்கட்டமைப்பு எந்த அளவுக்குப் பலவீனமானது என்பதைப் பெரும்பாலோர் உணர்வதில்லை.
நவீன உலகம் Wireless தொழில்நுட்பத்தில் இயங்குவது போலத் தோன்றினாலும், யதார்த்தம் முற்றிலும் வேறானது. கண்டங்களுக்கு இடையேயான இணையப் போக்குவரத்தில் 95%-க்கும் மேல் கடலுக்கு அடியில் கிடக்கின்ற மெல்லிய Fibre optic கேபிள்கள் மூலமே நடைபெறுகின்றன.
இந்த கேபிள்கள் எவற்றைக் சுமந்து செல்கின்றன என்றால்…
• பன்னாட்டு வங்கிப் பரிவர்த்தனைகள்
• AI servers மற்றும் cloud computing
• இராணுவத் தொடர்புகள் மற்றும் அரசு ரகசியங்கள்
• பங்குச் சந்தை (Stock Market) தரவுகள்
• வாட்ஸ்அப் முதல் streaming தளங்கள் வரை அனைத்து பொழுதுபோக்குகள் போன்றனவற்றை சுமந்து செல்கிறது.
ஈரான் அண்மையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கேபிள்களைத் தனது சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கை இணைக்கும் பல முக்கிய கேபிள்கள் (எடுத்துக்காட்டாக AAE-1, FALCON) செல்கின்றன.
இந்த வழித்தடத்தில் இடையூறு ஏற்பட்டால் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் போன்ற நாடுகள் மிகக் கடுமையான இணையத் துண்டிப்பைச் சந்திக்கும்.
பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆழ்கடல் கேபிள்களையே பெரிதும் நம்பியுள்ளதால், அங்கு ஒட்டுமொத்த தகவல் தொடர்பு அமைப்பும் முடங்கும் அபாயம் உள்ளது.
வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் நின்றுபோய், சர்வதேச சந்தையில் பெரும் பொருளாதார சரிவு ஏற்படும்.
“வெறும் சில மில்லிமீட்டர் தடிமன் கொண்ட இந்த கேபிள்கள் சேதமடைவது, ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே இருபது ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் வலிமை கொண்டது.”
இது வெறும் வதந்தியல்ல. ஆழ்கடல் உள்கட்டமைப்புகள் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. வரலாற்றில் பல உதாரணங்கள் இதை எச்சரிக்கிறது!
2008-ல் மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்பட்ட கேபிள் பாதிப்பு ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவைப் பாதித்தது.
2025 மற்றும் 2026-ன் தொடக்கத்தில் பால்டிக் கடல் மற்றும் செங்கடல் (Red Sea) பகுதிகளில் இணைய கேபிள்கள் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டது உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியது.
Edward Snowden வெளியிட்ட ரகசியங்களின்படி, பல நாடுகள் ஏற்கனவே இந்த கேபிள்களில் இருந்து தரவுகளைத் திருடும் (Tapping) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்கள் (Underwater Drones) மூலம் கேபிள்களைத் துண்டிப்பதோ அல்லது அவற்றில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்துவதோ இன்று சாத்தியமே.
கடலுக்கு அடியில் நடக்கும் இந்தச் சிதைவுகளை யார் செய்தார்கள் என்று நிரூபிப்பது கடினம் என்பதால், இது நாடுகளுக்கு இடையிலான ஒரு ‘நிழல் போராக’ (Shadow War) மாறியுள்ளது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம், இணையப் பாதுகாப்பு என்பது வெறும் கணினிகளோடு முடிந்துவிடுவதில்லை என்பதை உணர்த்துகிறது.
உலகின் பொருளாதாரம் கடலடியில் கிடக்கின்ற சில மெல்லிய கேபிள்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

You must be logged in to post a comment.