அலியான்ஸ் லங்கா தனது வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தி, 6,000 முச்சக்கர வண்டிகள் மூலமாக பொதுமக்களை எட்டியுள்ளது
இலங்கை முழுவதும் வீதிப் பாதுகாப்பு குறித்த அக்கறை அதிகரித்து வரும் நிலையில், அலியான்ஸ் லங்கா தனது நாடு தழுவிய வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் புதிய கட்டத்தின் மூலம் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதற்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தி வருகிறது. மே 2026-இல் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பைத் தொடர்ந்து, குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் நற்பயனை ஏற்படுத்தக்கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை அலியான்ஸ் லங்கா அண்மையில் மேற்கொண்டது. இதன் மூலம், உயிருக்கு முன்னுரிமை அளிப்போம், விபத்துகளைத் தவிர்ப்போம், என்ற எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த செய்தியை அது மேலும் பரப்பியது.
இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் முச்சக்கர வண்டிகள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்துள்ள அலியான்ஸ் லங்கா, பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி, தனது வீதிப் பாதுகாப்புச் செய்தியை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று சேர்த்துள்ளது. இன்று, நாடு முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் வீதிப் பாதுகாப்புச் செய்திகளைத் தாங்கிச் செல்கின்றன. இவை ஓட்டுநர்கள், பயணிகள், பாதசாரிகள் மற்றும் அனைத்து வீதிப் பயனாளிகளிடையேயும் விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, வீதியில் பொறுப்பான மற்றும் கவனமான நடத்தையையும் ஊக்குவிக்கின்றன.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அலியான்ஸ் நிறுவனம் இந்த செய்தியை தாங்கிச்செல்லும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஒரு வருட இலவச விபத்து மரணக் காப்பீட்டை வழங்கியுள்ளது. இது, தங்கள் சமூகங்களுக்கு சேவை செய்வதற்காக வீதியில் நீண்ட நேரம் செலவழிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும் மன அமைதியையும் வழங்குகிறது.
அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் என்பது, ஜேர்மனியின் மியூனிக் மாநகரில் தலைமையகத்தைக் கொண்டு, காப்பீடு மற்றும் சொத்து முகாமைத்துவத்தை முக்கிய வணிகங்களாகக் கொண்ட ஒரு முன்னணி உலகளாவிய நிதிச் சேவை வழங்குநரான Allianz SE-இன் பூரண உரிமையாண்மையைக் கொண்ட ஒரு துணை நிறுவனமாகும். Interbrand-இன் சிறந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் தரவரிசையின்படி, தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் நம்பர் 1 காப்பீட்டு வர்த்தகநாமமாக Allianz SE அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.