World

இந்தியாவிலும் நிலநடுக்கம்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவிலும் தற்போது ஆங்காங்கே நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நேற்று லடாக்கின் கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அசாமின் நாகோன் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.0 என பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் திகதி 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பெரிய பெரிய கட்டடங்கள் கண்இமைக்கும் நேரத்தில் இடிந்து தரைமட்டமாகின. இருநாடுகளிலும் பல ஆயிரம் பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதையடுத்து தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று 7 வது நாளாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இருநாடுகளிலும் சேர்த்து பலி எண்ணிக்கை என்பது 29 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் கூட பலபேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவிலும் சில நகரங்களிலும் சமீபகாலமாக நிலநடுக்கங்கள் அவ்வப்போது உணரப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இன்று அசாம் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 4.18 மணிக்கு அசாம் மாநிலம் நாகோனில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தை இந்திய மத்திய அரசின் நிலஅதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.

அதாவது அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து அந்த மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இன்று மாலை 4.18 மணிக்கு அசாமின் நாகான் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.0 என்ற அளவில் பதிவாகி உள்ளது´´ என கூறப்பட்டுள்ளது .

இருப்பினும் அசாமில் எந்த சேதமும், உயிர் பலியும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக நேற்று லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் நேற்று மதியம் 3.17 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று அசாமின் நாகோனில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading