இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலாவது நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், 33.628 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 74.922 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் அதன் மையப்பகுதி அமைந்திருந்ததாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தின் பல்வால் பகுதியில் அதிகாலை 1.35 மணியளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆகப் பதிவாகியுள்ளதுடன், பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் மையப்பகுதி 28.159 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 77.178 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த இரு நிலநடுக்கங்களினாலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதங்கள் தொடர்பான எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, குஜராத் மாநிலத்தின் வல்சாட் பகுதியில் நேற்று இரவு 8.46 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் குறுகிய கால இடைவெளியில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.