இனி வேகமா கார் ஓட்ட முடியாதா? புதிய தொழில்நுட்பம் பரிசீலனையில்
ஐரோப்பிய கமிஷன் ஒரு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை விட அதிக வேகத்தில் கார் சென்றால், கார் தானாகவே வேகத்தை குறைக்கும் வகையில் ஒரு தொழில்நுட்பத்தை கொண்டு வர ஆலோசித்து வருகிறார்கள். இது நடைமுறைக்கு வந்தால் 2030-ம் ஆண்டு வாக்கில் அறிமுகமாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் இது இறுதி முடிவு செய்யப்படவில்லை.
இதற்கு முன்பே ஜூலை 2024 முதல் ஐரோப்பிய யூனியனில் விற்கப்படும் அனைத்து புதிய கார்களிலும் ISA எனப்படும் Intelligent Speed Assistance கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது GPS, டிஜிட்டல் மேப் மற்றும் போக்குவரத்து குறியீடுகளை கண்டறியும் கேமரா மூலம் வேக வரம்பை கடந்தால் ஓட்டுநருக்கு எச்சரிக்கை மட்டும் கொடுக்கும். ஓட்டுநர் விரும்பினால் அதை நிறுத்தவும் முடியும்.
இப்போது பேசப்படும் புதிய அப்டேட் அதை விட ஒரு படி மேலே. ஐரோப்பாவின் சொந்த Galileo செயற்கைக்கோள், GPS, கேமரா மற்றும் டிஜிட்டல் மேப் மூலம் வேக வரம்பை இன்னும் துல்லியமாக கண்டறியும். வெறும் எச்சரிக்கை மட்டும் இல்லாமல், வேகம் அதிகமானால் தானாகவே இன்ஜின் பவரை குறைத்து காரின் வேகத்தை கட்டுப்படுத்தும். அதே நேரத்தில் அவசர நேரங்களில் ஓட்டுநர் அதை Override செய்யும் வசதியும் இருக்கும் என்கிறார்கள்.
ஐரோப்பாவில் நடக்கும் மரணத்தை ஏற்படுத்தும் சாலை விபத்துகளில் சுமார் 30% விபத்துகளுக்கு அதிவேகம் தான் காரணம் என்று European Transport Safety Council தெரிவித்துள்ளது.
முக்கியமான விஷயம், இது இன்னும் சட்டம் கிடையாது. இது ஒரு ஆரம்பக்கட்ட ஆலோசனை திட்டம் மட்டுமே. இது சட்டமாக வேண்டும் என்றால் ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டும்.

You must be logged in to post a comment.