இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்!!.
சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை, கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை
-புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
📌எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது.
ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
📌சூரியன் எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனியா வுக்கும் நேராகவும், 08.04.2026 அன்று மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் 02.04.2026 முதல் 15.04.2026 வரை இலங்கையின் பல பகுதிகளிலும் அளவிடப்படும் நாளுக்கான சராசரி வெப்பநிலை 38- 42 பாகை செல்சியஸ் ஆக நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பகல் பொழுதில் அளவிடப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📌உண்மையான வெப்பநிலை இவ்வாறிருக்க உணரக்கூடிய வெப்பநிலை 48 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்.
📌பொதுவாக மனித உடல் 40 பாகை செல்சியஸை்விட அதிக வெப்பநிலையை தாங்காது. இது பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும்.
40 பாகை செல்சியஸ் என்பது வெப்ப வாதத்தை( Heat Stroke) ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். ஆனால் எதிர்வரும் நாட்களில் (02.04.2026 முதல் 15.04.2026) வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
📌இக்காலத்தில் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திறந்த வெளிகளில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுப் போட்டிகள் உட்பட்ட சகல செயற்பாடுகளையும் நிறுத்துவது சிறந்தது.
📌எதிர்வரும் 02.04.2026 முதல் 15.04.2026 வரை அதிக வெப்பநிலை நிலவவிருப்பதனால் அதிக ஆவியாக்கமும் ஆவியுயிர்ப்பும் நிகழும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, வட மத்திய வட மேல் மாகாணங்களில் அதிக அளவில் ஆவியாக்கம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிக ஆவியுயிர்ப்பினால் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதனால் இந்த நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் பயிர்களுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேற்கொள்வது சிறந்தது.
📌எதிர்பார்க்கப்படும் அதிக வெப்பநிலை வெப்பச் சலன நிகழ்வை உருவாக்கும் என்பதனால் எதிர்வரும் 03.04.2026 முதல் எதிர்வரும் 10.04.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் சில இடங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த வெப்பச் சலன மழை இடி மின்னலோடு இணைந்த மழை என்பதனால் இடிமின்னல் நிகழ்வுகள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

You must be logged in to post a comment.