இலங்கையின் தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க விசேட அவதானம்
இலங்கையின் நாளாந்தப் பால் தேவையில் 43% மாத்திரமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வௌியாகியுள்ளதாக அவர் கூறினார்.
இதன் காரணமாக, வருடாந்த பால் உற்பத்தியை 410 மில்லியன் லீற்றரிலிருந்து 1,200 மில்லியன் லீற்றராக அதிகரிப்பதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நிக்கவெரட்டிய விலங்கு வளர்ப்புப் பண்ணையை அபிவிருத்தி செய்வதற்காக மேலும் 1,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேவையான உயர்தர இன பசுக்கள் உருவாக்கும் ஒரு மையப் பண்ணையாக நிக்கவெரட்டிய பண்ணையை மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
நிக்கவெரட்டிய பால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேலும் பல செயற்றிட்டங்கள் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மேலதிகமாக, உள்நாட்டுப் பால் பண்ணையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் தலையிட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

You must be logged in to post a comment.