Local

இலங்கையில் எல் நினோ தாக்கம்: ஒக்டோபர் – டிசம்பர் தீர்மானமிக்க காலப்பகுதி

‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வு காரணமாக வரும் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை மேலும் அதிகரித்து, மழைவீழ்ச்சி குறையக்கூடும் என்பதால், நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

இந்த நிலைமை மேலும் 8 முதல் 10 மாதங்களுக்கு, அதாவது அடுத்த ஆண்டின் மார்ச்-ஏப்ரல் வரை நீடிக்கக்கூடும் என்றும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இது மிகவும் தீவிரமான நிலையை அடையக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

காலநிலை முன்னறிவிப்புகளின்படி சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் வரும் நாட்களில் மழை வீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதோடு, குறிப்பாக ஜூலை 29ஆம் திகதி சற்று கூடுதல் மழை பெய்யக்கூடும்.

ஜூலை மாத இறுதி நாட்களிலும் ஓகஸ்ட் மாத தொடக்கத்திலும் இந்தப் பகுதிகளில் குறைந்த அல்லது கூடிய மழை நிலை காணப்படுகின்ற போதிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை அற்ற, கடுமையான வெப்பமான வானிலை நிலவும் என பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதே திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 35 பாகை செல்சியஸைக் கடந்து மிக அதிக மட்டத்தில் காணப்படுவதாகவும், வரும் நாட்களில் இது மேலும் உயரக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.

இதன் காரணமாக, கடுமையான வெயில் நிலவும் நண்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையிலான காலத்தில் திறந்தவெளிப் பணித்தளங்களில் தங்கியிருப்பதைத் முடிந்தவரை தவிர்க்குமாறும், நிழலான இடங்களில் தங்கியிருந்து போதுமான அளவு நீர் அருந்துமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை திறந்தவெளியில் நடமாட விடுவதை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அஜித் விஜேமான்ன மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், செப்டம்பர் இறுதி மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டிற்கு மழை கிடைப்பதன் மூலம் குளங்களின் நீர்மட்டம் உயரக்கூடும் என்றாலும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்காக அந்த நீரை சரியாக நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் அல்லது புயல் போன்ற கொந்தளிப்பான சூழ்நிலைகள் உருவானால், வழக்கத்தை விட பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளபோதிலும், அது குறித்து இன்னும் துல்லியமான முன்னறிவிப்பை வெளியிட முடியாது என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் தொடக்கத்தில் மழை குறைவதால் நீர் ஆதாரங்கள் வற்றிப்போகக்கூடும் என்பதால், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர் முகாமை செயலகம் இணைந்து ஏற்கனவே நீர் முகாமை திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன:

“இந்த எல் நினோ நிலைமை ஒரு மாதத்திலோ இரண்டு மாதங்களிலோ முடிந்துவிடாது. எட்டு, ஒன்பது, பத்து அல்லது சில சமயங்களில் ஒரு வருடம் வரை கூட நீடிக்கலாம். அடுத்த ஆண்டு 2027 மார்ச், ஏப்ரல் வரை இது நீடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

அதேபோல, உலகளாவிய முன்னறிவிப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த எல் நினோ நிலைமை ஓகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்களுக்குள் உச்ச கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இது அதி தீவிர நிலையை அடையும் என எதிர்பார்க்கிறோம். அதற்குப் பிறகு, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இது படிப்படியாகக் குறையும். ஆனால், இந்த உச்ச நிலையை எட்டும் காலத்தில், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியை விட அதிக மழை பெய்யும். 

கடந்த ஆண்டும் நவம்பர் மாதத்தில் புயல்கள் வந்தன என்பது நமக்குத் தெரியும். கடந்த ஆண்டுகளைப் பார்த்தாலும், நவம்பர் மாதத்தில்தான் வங்காள விரிகுடாப் பகுதிகளில் கொந்தளிப்பான சூழ்நிலைகள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், புயல்கள் போன்றவை உருவாகின்றன. எனவே, இந்த ஆண்டும் அவ்வாறு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த கொந்தளிப்பான சூழ்நிலைகள் உருவானால் மழை இன்னும் அதிகரிக்கும். 

உண்மையில், டிசம்பர் மாதத்தில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. எனவே, டிசம்பர் மாதத்தில் மழை அதிகரிப்பதை நாங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே எதிர்பார்க்கிறோம். அந்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. கண்டிப்பாய் வரும் என்று நான் கூறவில்லை, ஏனெனில் அது முன்னறிவிப்பு செய்வதற்கு மிகவும் தூரமான காலமாகும்.” என்றார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading