இலங்கை அபாய நிலையில்!…!!!
இலங்கை தற்போது எய்ட்ஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுநோய்கள் பரவுவதில் தீவிர அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் மற்றும் போதைப்பொருள் ஊசி பழக்கங்களில் ஈடுபடும் சுமார் 1,50,000 பேர் தற்போது உயர் அபாய நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் / எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் (National STD/AIDS Control Programme) எச்சரித்துள்ளது.
அமைச்சின் அண்மைய தரவுகளின்படி, 1,27,511 பேரை ‘அதிக அபாயம் கொண்டோர்’ என அடையாளம் கண்டுள்ளனர். இதில் பெண்கள் பாலியல் தொழிலாளர்கள் (35,000), ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்கள் (MSM) – 80,000, ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவோர் – 3,011, கடற்கரைப் பகுதிகளில் வாடிக்கையாளர்களை அணுகும் “பீச் போய்ஸ்” – 6,000 மற்றும் திருனர்கள் (TGW) – 3,500 பேரும் அடங்குகின்றனர்.
மருத்துவர் சாமல் சஞ்சீவா இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, “இந்தக் குழுக்களில் பாதுகாப்பற்ற பாலியல் நடப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் HIV தொற்று வேகமாக பரவுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் உள்ளது” என்றார்.
தற்போது இலங்கையில் சுமார் 6,000 பேர் HIV/AIDS நோயுடன் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மேற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கொழும்பு, குருநாகல், கண்டி, அனுராதபுர, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகளவு தொற்றுகள் பதிவாகியுள்ளன.
அபாயக்குழுக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கவலைக்கிடமானவையாக உள்ளன. திருனர்களிடையே 13.3% பேர் சிபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 1.4% பேருக்கு HIV தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பெண் பாலியல் தொழிலாளர்களில் 3.2% பேர் சிபிலிஸ், 1.8% பேர் HIV நோயுடன் உள்ளனர். MSM குழுவில் சிபிலிஸ் 2.9%, HIV 1.5% எனக் கண்டறியப்பட்டுள்ளது. பீச் பாய்ஸ் குழுவில் இதுவரை தொற்றுகள் பதிவாகவில்லை என்றாலும், அபாயகரமான பாலியல் பழக்கங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
2024ஆம் ஆண்டில் 39,547 பேர் HIV-யுடன் வாழ்ந்ததாகவும், அதில் 25,969 பேர் தங்களது நிலையை அறிந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த ஆண்டில் மட்டும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான HIV பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன; 5.9 இலட்சம் கொண்டோம் (condoms) உயர் அபாயக் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5,700 பேர் HIV-யுடன் வாழ்ந்தனர்; AIDS காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். புதிய தொற்றுகள் 500-க்கு குறைவாக இருந்தாலும், நிபுணர்கள் எதிர்காலத்தில் இது அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கின்றனர்.
மருத்துவர் சஞ்சீவா மேலும் தெரிவித்ததாவது“இலங்கையில் பாலியல் கல்வி பாடசாலை மட்டத்திலேயே வலுப்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் மற்றும் போதைப் பழக்கங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் நாட்டில் பாலியல் சார்ந்த சுற்றுலா (sexualised tourism) ஊக்குவிக்கப்படக்கூடாது,” என்றும் தெரிவித்துள்ளார்.
சுகாதார நிபுணர்கள், அரசாங்கம் உடனடியாக விழிப்புணர்வு, பாதுகாப்பு, மற்றும் பரிசோதனை திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதை தவறிவிட்டால், இலங்கையில் எய்ட்ஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் ஆபத்தான அளவிற்கு உயரும் என எச்சரிக்கின்றனர்.

You must be logged in to post a comment.