இலங்கை அரசாங்கம் வரி (VAT) விகிதங்களைக் குறைக்க தீர்மானம்
பொதுமக்களுக்கு நிதி நிவாரணம் வழங்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விகிதங்களைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம் கொண்டுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
டெம்பிள் ட்ரீஸில் 1,540 புதிய கிராம அலுவலர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் விழாவில் அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் அவர், அதிகரித்து வரும் பொதுச் செலவினங்களைக் கையாளும் அதே வேளையில், குடிமக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், “அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மதிப்புக்கூட்டு வரி (VAT) விகிதங்களைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே எங்கள் நோக்கம்” என்று அவர் கூறினார்.
அத்தியாவசிய கல்விப் பொருட்கள் மீதான வரிகளை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புத்தகங்கள் வாங்கும் போது குழந்தைகள் வரிச்சுமையைச் சுமக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
மேலும், “ஒரு குழந்தை படிப்பதற்காகப் புத்தகம் வாங்கும்போது வரி செலுத்த வேண்டியிருந்தால், நாம் அந்த வரியை நீக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

You must be logged in to post a comment.