Local

இலங்கை தமிழர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கிய வாக்குறுதி!

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் உறுதியளித்தார்.

தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் நேற்று சந்தித்து உரையாடினார். இதன்போதே கமல் ஹாசன் மேற்கண்டவாறு கூறினார். 

போர், பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கைவாழ் தமிழர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி நிற்கின்றனர். 

மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் (தன்னாட்சி உரிமை) பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகின்றது என்று இந்தச் சந்திப்பின்போது சிறீதரன் எம்.பி. தெரிவித்தார். 

அத்துடன் தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது பற்றிக் கவலை தெரிவித்த சிறீதரன் எம்.பி., மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று  இதன்போது கமல் ஹாசன் உறுதியளித்தார். 

சந்திப்பின் இறுதியில் இலங்கையின் சமகால அரசியல் வரலாறு, பிரச்சினைகள் குறித்தான ஆவணங்கள், புத்தகங்களைப் பரிசளித்து சிறீதரன் எம்.பி விடை பெற்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading