World

இஸ்ரேலிய சூழ்ச்சியில் சிக்கிய அமெரிக்கா…!!!

தற்போது உலக சந்தையில் தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. பாதுகாப்புத் துறை (Defense sector) பங்குகளின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது.

இதன் பொருள் என்னவென்றால், Smart money என்று அழைக்கப்படும் பெரும் முதலீட்டாளர்கள், தற்போதைய சூழலில் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் அமைதியைக் கொண்டுவரும் என்று நம்பவில்லை.
மாறாக ஒரு மிகப்பெரிய போருக்கே தயாராகி வருகின்றனர்.

வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் தவிர்க்கும் ஒரு கேள்வி இதுதான்: “இந்தப் போரின் முடிவில் அமெரிக்கா எதைச் சாதிக்கப் போகிறது?”

ஏனெனில் அவர்களுக்கு அந்த கேள்விக்கான விடை தெரியாது.

அமெரிக்க ராணுவ ஆலோசகர்களே எச்சரிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ஈரானை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது.

கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவுடனான நேரடி மோதலுக்கு ஈரான் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது.

குறிப்பாக, ஈரானின் நெருங்கிய கூட்டாளிகளான சீனாவும் ரஷ்யாவும், அமெரிக்காவின் நகர்வுகளை உளவு பார்த்தும், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்கியும் ஈரானுக்குப் பின்னால் நிற்கின்றன.

டிரம்ப் அவர்களின் அமைச்சரவையில் உள்ள 90% அதிகாரிகள் “இந்தப் போர் வேண்டாம்” என்று தடுத்தும், அவர் பிடிவாதமாக முன்னேறி வருகிறார்.

சமீபத்தில் Reuters மற்றும் Wall Street Journal போன்ற ஊடகங்களில் கசிந்த ரகசியத் தகவல்கள் அனைத்தும், பென்டகன் அதிகாரிகள் ட்ரம்பின் இந்த முடிவால் ஏற்பட்டுள்ள பீதியை வெளிப்படுத்துவதையே காட்டுகின்றன.

கடந்த ஜூன் 2025-இல், ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு வர இரண்டு வார கால அவகாசம் கொடுத்து, மூன்றே நாட்களில் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) மூலம் அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது.

தற்போது ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் ஈரான் மீண்டும் இரண்டு வாரம் அவகாசம் கேட்டுள்ளது.

வரலாறு மீண்டும் திரும்புவதைப் போலத் தெரிகிறது.

இந்த முழு நாடகத்திலும் இஸ்ரேலின் பங்கு மிக முக்கியமானது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை அழிக்கவும், அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவும் , தங்கள் சொல் கேட்கும் பொம்மை அரசை உருவாக்கவும் இஸ்ரேல் துடிக்கிறது.

ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், இந்தப் போரில் ஏற்படும் பொருளாதார மற்றும் உயிர்ச் சேதங்களை அனுபவிக்கப் போவது அமெரிக்காதான், இஸ்ரேல் அல்ல.

இந்த போரில் இஸ்ரேல் உளவுத் தகவல்களையும், சில வான்வழித் தாக்குதல்களையும் மட்டுமே வழங்கும்.

ஆனால், ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் தாக்கப்படப் போவது அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தான்.

கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள்தான் ஈரானின் முதல் இலக்கு, போர் தொடங்கிய அடுத்த நொடி இந்த இராணுவத்தளங்கள் தரைமட்டமாகும்.

போரின் முதல் 72 மணி நேரத்தில் உயிரிழக்கப் போகும் வீரர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்களாகவே இருப்பார்கள். இஸ்ரேலியர்கள் அல்ல.

இஸ்ரேல் குறைந்த இழப்புடன் அதிக லாபத்தைப் பெற நினைக்கிறது.

அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தும் AIPAC என்ற யூத lobby யின் செல்வாக்கைப் பயன்படுத்தி, டிரம்பை இந்தப் போருக்குள் தள்ளுவதில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளது.

சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் டிரில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளன.

இந்தப் போர் தொடங்கினால், மத்திய கிழக்கின் நிலைத்தன்மை குலையும். ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் முடங்கும்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளது போல, “இது நெருப்போடு விளையாடும் விளையாட்டு.”

சீனா ஏற்கனவே ஈரானுக்கு அமெரிக்கத் தொழில்நுட்பங்களை வீழ்த்தும் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது.

ரஷ்யா தனது போர்க்கப்பல்கள் மூலம் ஈரானுக்கு நேரடி உளவுத் தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் North Carolina வில் அமெரிக்க வீரர்களிடம் பேசிய டிரம்ப், “சில நேரங்களில் அச்சம் தேவை, அதுதான் காரியத்தைச் சாதிக்கும்” என்று கூறியுள்ளார். தெஹ்ரானை (ஈரான்) அச்சப்படுத்துவதன் மூலம் பணிய வைக்கலாம் என்பது டிரம்ப்பின் எண்ணம்.

ஆனால், ஈரான் இந்த வாரமே பதில் அளித்துவிட்டது:

“நாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை.”

ஈரானின் இந்த ஒற்றை வரி, அமெரிக்காவின் பல ஆண்டுகால ‘அச்சமூட்டும்’ வியூகத்தை தவுடுபொடியாக்கிவிட்டது.

அதிபர் டிரம்பின் பிடிவாதம், இஸ்ரேலின் தூண்டுதல் என எல்லாம் சேர்ந்து அமெரிக்காவை ஒரு மீள முடியாத போருக்குள் தள்ளியுள்ளது.

அந்தப் போரின் முடிவில் அமெரிக்கா மகுடம் சூடுமா அல்லது மண்டியிடுமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்!

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading