இஸ்ரேலை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்றிய யூதன்…!!!
1960-களில் சிரிய அரசாங்கத்தின் மிக உயரிய அதிகார மட்டத்திற்குள் ஒரு தொழிலதிபர் நுழைந்தார்.
பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சர் பதவி வரை அவர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. சிரியாவின் அதிபர், ராணுவ தளபதிகள் என அனைவரும் அவரை தங்கள் நெருங்கிய நண்பராகக் கருதினர்.
ஆனால், அவர் ஒரு மர்ம மனிதன்.
சிரியா கொண்டாடிய அந்த ‘Kamel Amin Thabet என்ற கோடீஸ்வரரின் நிஜப் பெயர்: Eli Cohen).
அவர் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்’ (Mossad) அனுப்பிய ஒரு அதிபயங்கர ரகசிய ஏஜென்ட்.
Eli Cohen 1924-ல் எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே கூர்மையான புத்திசாலித்தனமும், மொழிகளைக் கற்கும் திறனும் அவரிடம் இருந்தன. 1957-ல் அவர் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தார்.
அக்காலத்தில் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கியது சிரியா. சிரியாவின் ராணுவ ரகசியங்களை உள்ளே இருந்து சேகரிக்க ஒரு தகுதியான ஆளைத் தேடிக் கொண்டிருந்த மொசாத் அமைப்பின் கண்ணில் எலி கோஹன் பட்டார்.
அவரது அரபு மொழி உச்சரிப்பு, அசாத்திய தைரியம் ஆகியவை அவரை உளவு வேலைக்குத் தகுதியானவராக்கின.
எலி கோஹனை சிரியாவிற்குள் நேரடியாக அனுப்ப முடியாது. அதற்கு மொசாத் ஒரு உலகத்தரம் வாய்ந்த பின்னணிக் கதையை (Cover Story) உருவாக்கியது.
1961-ல் எலி கோஹன் அர்ஜென்டினாவின் Buenos Aires நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் ‘காமல் அமீன் தாபெத்’ என்ற பெயரில் சிரிய வம்சாவளி வணிகராகத் தன்னை மாற்றிக் கொண்டார்.
அர்ஜென்டினாவில் இருந்த சிரிய தூதரக அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களுடன் மிக நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அங்குதான் சிரியாவின் வருங்கால அதிபரான அமீன் அல்-ஹஃபீஸ் (Amin al-Hafiz) என்பவருடன் இவருக்கு நட்பு கிடைத்தது.
1962-ல் பெரும் செல்வந்தர் போல சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிற்குள் நுழைந்தார் காமல் (Eli Cohen).
டமாஸ்கஸில் ராணுவ தலைமையகத்திற்கு மிக அருகிலேயே ஒரு ஆடம்பர வீட்டை எடுத்தார் Eli Cohen.
அங்கு சிரியாவின் உயர்மட்ட அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகளுக்கு மது மற்றும் சூதாட்ட விருந்துகளை அளித்தார். போதையில் அதிகாரிகள் உளறிய ராணுவ ரகசியங்கள் அனைத்தையும் தன் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய ரேடியோ டிரான்ஸ்மிட்டர் மூலம் இஸ்ரேலுக்கு அனுப்பினார்.
அவரது உளவு வாழ்க்கையின் உச்சகட்ட சாதுரியம் கோலான் குன்றுகளில் (Golan Heights) அரங்கேறியது. சிரியாவின் மிக ரகசியமான, பலத்த பாதுகாப்பு கொண்ட ராணுவ பின்தளங்களை எலி கோஹன் பார்வையிடச் சென்றார்.
வெயிலில் வாடும் நம் வீரர்களுக்கு நிழல் தரும் வகையில், இந்த ரகசிய பின்தளங்களைச் சுற்றி யூக்கலிப்டஸ் (Eucalyptus) மரங்களை நடுங்கள்” என்று சிரிய ராணுவ அதிகாரிகளுக்கு அவர் யோசனை கூறினார்.
இது Eli Cohenன் master plan என்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிரிய ராணுவமும் அதை ஒரு நல்நோக்கமாகக் கருதி, தங்களின் அனைத்து ரகசிய பின்தளங்களைச் சுற்றிலும் யூக்கலிப்டஸ் மரங்களை நட்டது.
ஆனால் எலி கோஹன் செய்த மாபெரும் சதி அது.
இஸ்ரேலிய விமானப்படைக்கு வானில் இருந்து பார்க்கும்போது, அந்த யூக்கலிப்டஸ் மரங்கள் சிரியாவின் ரகசிய பின்தளங்கள் எங்கு இருக்கின்றன என்பதைக் காட்டும் துல்லியமான ‘விஷுவல் மேப்’ (Visual Map) ஆக மாறின.
பின்நாட்களில் நடந்த ஆறு நாள் போரில் (Six-Day War) இஸ்ரேல் மிக எளிதாக கோலான் குன்றுகளைக் கைப்பற்ற இந்த மரங்களே வழிகாட்டின.
எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும், உளவுத்துறையில் ஒரு சிறிய தவறும் மரணத்தை வரவழைக்கும். எலி கோஹன் தினமும் ஒரே நேரத்தில் இஸ்ரேலுக்கு ரேடியோ சிக்னல்களை அனுப்பிக் கொண்டிருந்தார்.
1965 ஜனவரியில், சிரிய ராணுவம் சோவியத் யூனியனின் அதிநவீன சிக்னல் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தி, டமாஸ்கஸில் ரேடியோ சிக்னல்கள் எங்கிருந்து புறப்படுகின்றன என்று தேடியது.
துரதிர்ஷ்டவசமாக, எலி கோஹன் இஸ்ரேலுக்குச் செய்தி அனுப்பிக் கொண்டிருந்த போதே சிரிய பாதுகாப்புப் படையினர் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவர் ‘காமல் அமீன் தாபெத்’ அல்ல, இஸ்ரேலின் ஒற்றன் எலி கோஹன் என்பது தெரிந்ததும் சிரிய அரசாங்கம் அதிர்ச்சியில் உறைந்தது. கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1965 மே 18 அன்று, டமாஸ்கஸின் மர்ஜே சதுக்கத்தில் (Marjeh Square) ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் எலி கோஹன் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார்.
இன்றுவரை இஸ்ரேலின் வரலாற்றில் மிகச்சிறந்த மற்றும் அசாத்தியமான ஒற்றனாக எலி கோஹன் மதிக்கப்படுகிறார். அவர் கொடுத்த உளவுத் தகவல்களே இஸ்ரேல் என்ற நாட்டின் பாதுகாப்பில் இன்றும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எலி கோஹன் என்ற தனி மனிதன் சிரியாவின் உயர்மட்ட ரகசியங்களை அணு அணுவாகச் சேகரித்து இஸ்ரேலுக்குக் கொடுத்திருக்காவிடில், 1967-ல் நடந்த ‘ஆறு நாள் யுத்தத்தில்’ (Six-Day War) இஸ்ரேல் தேசம் மீள முடியாத பலத்த பின்னடைவுகளையும் மாபெரும் உயிர்ச்சேதங்களையும் சந்தித்திருக்கக்கூடும்.
சிரியாவின் வியூகங்கள், பதுங்கு குழிகள் மற்றும் அரண்களைப் பற்றி அவர் முன்கூட்டியே அளித்த துல்லியமான தகவல்களும், அவர் நட்ட யூக்கலிப்டஸ் மரங்களும் இல்லையென்றால், கோலான் குன்றுகளை இஸ்ரேல் கைப்பற்றுவது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும்.
மாபெரும் ராணுவ பலம் கொண்ட அரபு நாடுகளை எதிர்த்து இஸ்ரேல் பெற்ற அதிவேக வெற்றிக்கு எலி கோஹனின் உளவுத் தகவல்களே அடித்தளமாக அமைந்தன.
சிரியாவின் மிக உயரிய அதிகார மட்டத்தில் இருந்தவர்கள் அவரை தங்களின் உண்மையான நண்பன் என்று நம்பி, தங்களின் பலவீனங்களை அவரிடமே அழுது புலம்பும் அளவிற்கு எலி கோஹனின் போலி பிம்பம் மிக வலுவாக இருந்தது.
சிரியா அரசு அந்தப் பொய்யை உண்மை என்று நம்பி ஏமாந்ததன் இறுதி விளைவு, போர்க்களத்தில் அந்த நாடு சந்தித்த மிகப்பெரிய தோல்வியாக முடிந்தது.
ஒரு நாட்டின் பாதுகாப்பு அரண், ஒரு தனிமனிதனின் திட்டமிட்ட பொய்யால் எப்படி நிர்மூலமாக்கப்பட்டது என்பதைக் காட்டும் வரலாற்றுச் சான்று இது.
அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில், உளவு வேலைகளும் ஊடுருவல்களும் புதியவை அல்ல.
எலி கோஹன் சிரியாவில் செய்தது போல, உலகின் பல போராட்டக் களங்களிலும், உள்நாட்டு அரசியலிலும் இத்தகைய உத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை வரலாறு காட்டுகிறது.

You must be logged in to post a comment.